Saturday, July 2, 2016

வந்ததை வரவில் வைப்போம்

வந்ததை வரவில் வைப்போம் 
---------------------------------------------------


என்றும் மனதில் நிற்கும் ஒரு, கவிஞர் கண்ணதாசனின் அருமையான பாடல், பாவமன்னிப்பு என்ற படத்தில் இடம் பெற்ற  'எல்லோரும் கொண்டாடுவோம்' என்ற பாடல் ! அதில் இடம் பெற்ற இந்த இரண்டு வரிகள் என்றும் என் சிந்தைக்குகந்த வரிகள்.

"வந்ததை வரவில் வைப்போம்
 செய்வதை செலவில் வைப்போம்"

கவிஞரின் வரிகள் மனித வாழ்வின் எந்த சந்தர்ப்பத்திற்கும் உகந்ததாயிருப்பதுவும் , உள்ளத்தை மயில்பீலி கொண்டு வருடுவது போல இதமாக இருப்பதுவும்  திண்ணம் !

' வந்ததை வரவில் வைப்போம் , வாழ்க்கையில்  இன்பம் காண்போம்' என்பது எத்தனை  அருமையான உண்மையான சித்தாந்தம் !

நம் வாழ்வில் நம்மை அடையும் எத்தனையோ வரவுகள், நாம் எண்ணி , நாம் ஆசைப்பட்டு வருவதில்லை! அப்படி இருக்கையில், நம்மிடம் வருவதை, உள்ளார்ந்த அன்போடும் ஆதரவோடும் வணங்கி  ஏற்பதில் உண்டாவது, உண்மையான இன்பமாகத்தான் இருக்கும் என்பது, என் தந்தையார் எனக்களித்த பல பாடங்களில் ஒன்று! அதை நான் அனுபவத்தில் உணர்ந்து மகிழ்ந்ததுண்டு ! அதை நினைவுறுத்துமுகமாகவே கவிஞரின் மேற்கண்ட வரிகள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது ! அதனாலேயே  அதன் பின்னிலேயே இன்னும் நான் சென்றுகொண்டேயிருக்கிறேன்!

வந்ததை வரவில் வைப்போம் : இளமைக் காலத்தில் ஒரு குறிப்பிட்ட  வயது  வரும் வரை, எந்தவிதமான இலக்குகளும் எனக்கு இருந்ததில்லை! சில நாட்கள் கழித்து, 'ஒரு இசை விற்பன்னனாக வேண்டும், அல்லது படிப்பில் இசை சம்பந்தமாக ஏதேனும் செய்ய வேண்டும்' என்ற அவா எனக்கு உதித்தது! ஆனால் சந்தர்ப்பங்கள் துணை செய்யவில்லை! 'நடைமுறை வாழ்க்கைக்கு அது துணைபோகாது' என்ற சிலரின் தீர்மானங்களை நான் ஏற்று நடக்க வேண்டிய கட்டாயம் உண்டானது! கணக்கு வழக்குப் பாடங்களைக் கற்கவேண்டி நான் அனுப்பப்பட்டேன். அதை அந்த நேரத்தில் மனதார ஏற்று நான் நடந்திருக்கவில்லையெனில், எனது நிம்மதிக்குக் கண்டிப்பாக பங்கமேற்பட்டிருக்கும்! வந்ததை - வந்த அதை - வரவில் வைத்தேன் ! வாழ்க்கையில் பயணித்தேன் ! வளம் பெற்று  வாழ்கின்றேன் !

இன்னொரு பக்கம் , மனம் சாடியதுண்டுதான்  - 'எது வந்தாலும் ஏற்றுக்கொண்டு வாழ்வது ஒரு வாழ்க்கையா ? இலக்கை நோக்கிச் செல்லும் வழியில் எதிர்ப்படும் இன்னல்களை எதிர்கொண்டு, போராடி வெற்றி கொள்வதல்லவா வாழ்வின் சாதனை ' என்று ! இருப்பினும், சந்தர்ப்பம் துணை செய்யாதபோது , வருவதை இன்முகத்துடன் ஏற்றுக்கொள்வதில்தான் இன்பம்! 'எல்லாமே ஏற்புடையதுதான்' என்ற தீர்மானமே அறிவுடைமை' என்பது எனது அனுபவம்!

எனில், சில தீர்மானங்கள், அனுபவத்தால் மட்டுமே உணர்ந்து ஒப்புக்கொள்ளப் படவேண்டியவை !  'நம்பிக் கால் வைத்தால் நலமே நடக்கும்'  என்ற அசைக்க முடியாத நம்பிக்கையோடு நடைபோட வேண்டும் ! அந்த ராஜபாட்டையில் நாம் நடத்தும் பயணம், பல அனுபவங்களை நமக்குப் பெற்றுத் தரும்!  வளமான காலங்கள் சில கழிந்த பின்னே, சற்றே நாம் திரும்பிப் பார்த்தோமெனில், இதுவரை நாம் எத்தனை முட்களைக்  கடந்திருக்கிறோம், அதற்குள் எத்தனை மனத்திண்மை பெற்றிருக்கிறோம் என்பது புரியும் ! அது புரிந்தால் முன்னேயுள்ள பாதையில் கிடக்கும் முட்கள் அனைத்தும் மலர்களாகவே தோற்றமளிக்கும் ! மனதிற்கு மணம் சேர்க்கும் !

வாழ்வில் எத்தனையோ விதமான மனிதர்களைச் சந்திக்க நேருகிறது ! மனம் ஏற்றுக் கொண்டவரோடு அதிகமாகப் பயணிக்கிறோம்! எனில், ஏற்புடையவரில்லையெனில் வெறுக்காமல் இருக்க வேண்டும்! அதுவே தரம் !

ஏற்பவை அனைத்தும் - கழிந்த சில கணங்களுக்கு முன்பு நான் சந்தித்த கடைசி நபர் வரை, அனைத்தும், அனைவரும்  எனக்குப் 'புதுவரவு' தான்!

வாழ்வில் எத்தனையோ சிறுசிறு வரவுகள் பெரும் வரங்கள் ஆகின்றன !அனைத்தும் வரவேற்கப்படவேண்டிய புதுவரவுகள் ! வாழ்வை வசந்தமயமாக்கும் வண்ண வரவுகள்! வடிவார்ந்த இன்வரவுகள் !

ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருந்தால், எந்த வரவும் என்றும் புதுமைதான் ! எங்கும் இனிமைதான் ! எனவே  வந்ததை வரவில் வைத்து, செய்ததை செலவில் வைத்து, சிந்தை நோகாமல் முன்னோக்கிப் பயணம் செய்து வாழ்வில் வளம் பெறுவோம். வெற்றி காண்போம் !

--கிருஷ்ணமூர்த்தி பாலாஜி
July 01 2016